சென்னையில் அமித்ஷா மீது பதாகை வீசிய நபரிடம் போலீசார் விசாரணை
சென்னையில் அமித்ஷா மீது பதாகை வீசிய நபரிடம் போலீசார் விசாரணை
சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீசப்பட்ட நபர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் பயணமாக டெல்லியிலிருந்து இன்று காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டார் அமித் ஷா. சரியாக மதியம் 2 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அமித்ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
அங்கிருந்து காரில் எம்ஆர்சி நகரில் உள்ள லீலாபேலஸுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா புறப்பட்டார்
முன்னதாக, விமான நிலையத்தில் குவிந்திருந்த பொது மக்களை பார்த்து கையை அசைத்து வந்தார். அப்போது, யாரும் எதிர்பாரத வகையில் ஒருவர் கையில் இருந்த பாதாகையை வீசினார். ஆனால், நல்லவேளையாக அது மத்திய அமைச்சர் அமித் ஷா மீது விழுவில்லை. மாறாக அருகிலேயே விழுந்தது.
இதைக் கண்டு திக்கிட்ட பாதுகாப்பு போலீசார், அந்த நபரை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பெயர் துரைராஜ் என்றும், வயது 60 என்றும், தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னை நங்கநல்லூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக -பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் பாஜக, நங்கநல்லூரில் திமுகவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தியது.
அப்போது, ஆப்பாட்டத்தில் உள்ளே புகுந்து, பிரதமா் மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் எங்கே ? என்று கோஷமிட்டார் இந்த துரைராஜ். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் தொண்டா்கள் அவரை புரட்டி எடுத்துவிட்டனர். அதே நபர் தான் தற்போதும், இந்த பதாகை வீச்சு சம்பவத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.