Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

0

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையின்போது தரிசனம் செய்ய, ஆன்-லைன் முன்பதிவு 2 நாட்களில் நிறைவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தினமும் 250 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 16 முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன.

இதில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும், மண்டல பூஜை, மகரவிளக்கு தினத்தில் 5,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்-லைன் முன்பதிவு கடந்த 1ம் தேதி தொடங்கியது. கேரள காவல்துறைதான் இந்த இணையதளத்தை பராமரித்து வருகிறது. முன்பதிவு செய்ய எந்த கட்டணமும் இல்லை. வழக்கமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆன்-லைன் முன்பதிவு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலத்தில் நடை திறப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிடும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களில் அனைத்து நாட்களுக்கான தரிசன முன்பதிவு நிறைவடைந்தது. இது புக்கிங் செய்ய முடியாத பக்தர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எனவே கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த சுனில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருப்பதி கோயிலில் தற்போது தினமும் 18 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோல சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம் சபரிமலைக்கு பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து நடந்துதான் செல்கின்றனர். நிலப்பரப்பும் அதிகளவில் உள்ளது. எனவே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தவறில்லை என கருத்து தெரிவித்தது. இதுதொடர்பாக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சோகன் கூறுகையில், மண்டல, மகரவிளைக்கு காலத்தில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே சபரிமலையில் அதிக பக்தர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கேரளாவில் பல இடங்களில் ஓய்வு மையங்கள் அமைக்கப்படுவதுண்டு. இவற்றில் கொரோனா பரிசோதனை வசதி ஏற்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை நெகட்டிங் ஆன பக்தர்களை பம்பையில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர் சங்க தலைவர் பைஜூ கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.