திமுகவுக்கு தான் ஆதரவு.. காடுவெட்டி குரு மகன் பரபரப்பு பேட்டி.. பாமக மீது காட்டம் !
அடுத்தாண்டு வரவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது. அதன்படி தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில் எதிர்கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேரில் சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு பாமக தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சந்திப்புக்கு பின்னர் சொந்த ஊருன அரியலூர் மாவட்டம் காடுவெட்டி சென்று கலையரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் மாவீரன் காடு வெட்டி குருவிற்கு சென்னையில் சிலை அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தோம் என்றார்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தலைமையுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் உருவாக்கிய மாவீரன் மஞ்சள் படை தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யும்.
வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டை தி.மு.க. பெற்றுத்தரும் என நம்புகிறோம். பா.ம.க.வினர் எங்களை தி.மு.க.விடம் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் பா.ம.க. தான் பெட்டியை வாங்கிக் கொண்டு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் நிற்பது குறித்து பின்னர் தெரிவிப்போம். வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தி.மு. க.விடம் தான் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனவே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் மாவீரன் மஞ்சள் படை இடம்பெறாது.
குருவின் பெயரையோ புகைப்படத்தையோ தேர்தலுக்கு பயன்படுத்த பா.ம.க. விற்கு ஒரு சதவீதம் கூட தகுதி இல்லை. குருவின் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள். 30 வருடம் உள் ஒதுக்கீடு குறித்து பேசாமல் இப்போது பேசுவதற்கு என்ன அவசியம் எனவும் காடுவெட்டியின் மகன் கூறினார்