கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரின் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 23 லட்சம் சிக்கியது.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் சீராளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
டிரைவர் உள்பட மொத்தம் 4 பேர் பயணம் செய்த அந்த காரில் ரூ.1 கோடியே 23 லட்சம் மற்றும் 9 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து காரில் வந்த ஆந்திர மாநிலம் சீராளாவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ரகுமான் (22), சென்னை பெரம்பூரை சேர்ந்த அசோக் (40) மற்றும் டிரைவர் ஷேக்அன்சார் (28) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், தாங்கள் நகை வியாபாரிகள் நகைகள் வாங்குவதற்காக சென்னை செல்வதாக கூறியதாக தெரிகிறது.
அவர்கள் 4 பேரையும் ஆரம்பாக்கம் போலீசார் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.