சென்னையில் இரவு முழுதும் கொட்டித் தீர்த்த மழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய
விடிய மழை பெய்தது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி
அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும்
மேலாக பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி
அளித்தன.
நள்ளிரவில் மீண்டும் மழை தொடங்கி அதிகாலை வரை பெய்து
கொண்டிருந்தது. பகல் நேரத்தில் வெப்பமாக காணப்பட்ட
நிலையில், இரவு இதமான சூழல் நிலவியது. சோழிங்கநல்லூர்,
மாதவரம், ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பரவலாக
மழை பெய்துள்ளது.
இதேபோன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.
இதே போன்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம்,
இரட்டணை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த
தாழ்வு நிலையானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
நிலையாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட
மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி,
பாம்பன் ஆகிய இடங்களில், துறைமுகப் பகுதிகளில், ஒன்றாம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.