அரியமங்கலம்-
துவாக்குடி இடையே
சர்வீஸ் சாலை பணிகளை தாமதப்படுத்துவது
நீதிமன்ற அவமதிப்பு.
சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு.
திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 16 மாதங்கள் கடந்த நிலையில், அது குறித்த புதிய அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியாகி மேலும் 9 மாதங்கள் கடந்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என, சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை,
துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். சக்திவேல், எஸ்.சுப்பிரமணியன், எம்.சண்முகம், ஏ. நடராஜன், கே. மோகன் உள்ளிட்டோர், திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தது :
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சாலையில், இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை,
துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 6 மாதங்களில் சேவை சாலை அமைக்க வேண்டும் என கடந்த 15.10.2019 அன்று தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் 16 மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்த புதிய அளவுகளின்படி அரசாணை வெளியிடப்பட்டது.
அது தொடர்பாக உள்ளுர் நாளிதழ்களில் 16.02.2021 பிரசுரமானது.

அதன் பிறகும் சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையிலும் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் நடைபெறவில்லை. இது தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரை 30.07.2021 அன்று நேரில் சந்தித்து நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை வைத்த போது டிசம்பர் 2021க்குள் நிச்சயம் நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் தொடர்புடை எந்தப்பணிகளும் நடைபெறவில்லை .
தொடர்புடைய துறை அலுவலர்களான தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நில கையகப்படுத்தும் பிரிவு சிறப்பு வட்டாட்சியர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து பணியை துரிதப்படுத்த வேண்டிய பொறுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இருந்தும் மெத்தனமாக செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக நெடுஞ்சாலைத்
துறை முதன்மைச் செயலாளர், மத்திய நெடுஞ்சாலைத்
துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோருக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தவிர திருச்சி மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடமும் நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடக்கும் சர்விஸ் சாலைப் பணிகளை விரைந்து செயல்படுத்தக்கோரி, பிரதமர், குடியரசு தலைவர் தமிழக ஆளுநர் உள்ளிட்டோருக்கு (ஜனவரி 10, நேற்று மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி ( 20.10.2021) சுமார் இரு மாதங்கள் முடிந்த நிலையில், மனு முதல்வரின் பார்வைக்கு சென்றதா என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.
எனவே இனியும் தாமதிக்காது, தமிழக முதல்வர், திருச்சியில் சேவை சாலைப் பணிகளை பணியை தொய்வின்றி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் இந்நிலையில், சில சுய நல வியாபாரிகள் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
(அப்பாவி வியாபாரிகளிடம் வியாபாரிகள் சங்க மாநில நிர்வாகி ஒருவர் முதல்வரிடம் கூறி பறக்கும் சாலை பணிகளை உடனே தொடங்குகிறேன்,
உங்கள் கடைகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என கூறி பல லட்சம் சுருட்டியதாகவும் தெரியவருகிறது)
இது முற்றிலும் சர்விஸ் ரோடு திட்டத்தை முடக்கும் செயலாகும்.
வியாபாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு சாலையின் அகலம் 60 மீட்டர் என்று அறிவிக்கப்பட்டதை 45 மீட்டர் என திருத்திய அரசாணையின்படி நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அதன்படியாவது, பணிகள் நடைபெற வேண்டும்.
புதிதாக கட்டடம் கட்டுகின்ற பெரும்பாலானோர் சேவை சாலைக்கு இடம் விட்டு கட்டி வரும் நிலையில் மேலும் சிலர் சர்வீஸ் சாலை அமையவுள்ள பகுதியில் கட்டடம் கட்டி, மின் இணைப்பும் பெற்றுள்ளனர்.
இதற்கு மாநகராட்சியும் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.