குத்தாலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 2021 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. முக்கியமாக திமுக இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை முழு மூச்சோடு தொடங்கிவிட்டது.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பக்கா திட்டத்தோடு, மாநிலம் முழுக்க ஒவ்வொரு தேதியிலும் பிரச்சாரம் செய்ய திமுக சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திமுக சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஆனால் பிரச்சாரம் தொடங்கி சில நிமிடங்களில் போலீசார் இவரை கைது செய்தனர். அனுமதி இன்றி பிரச்சாரம் செய்தார் என்று கூறி போலீசார் இவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சில நிமிடங்களில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல் நேற்று நாகை மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் திமுக சார்பாக உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் கடற்கரையில் மீனவர்களுடன் இவர் உரையாடிவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் மீண்டும் கைது செய்யப்படடார். நேற்று கைது செய்யப்பட்ட இவர் சில நிமிடங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் உதயநிதி ஸ்டாலின் சீர்காழியிலும், மயிலாடுதுறை அருகே இருக்கும் குத்தாலம் பகுதியிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்றும் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்தே போலீசார் இவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் போலீசார் அதிக அளவில் இவரை பின் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் குத்தாலத்தில் இவர் பிரச்சாரம் தொடங்கி சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டார். அனுமதி இன்றி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் 3 நாள் பிரச்சாரத்தில் 3வது முறையாக உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி கைதை தொடர்ந்து திமுகவினர் பலர் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் கைது செய்வது என்ன நியாயம், தேர்தல் வரப்போகும் நேரத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால் எப்படி என்று திமுகவினர் மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் குத்தாலத்தில் போலீசார் – திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.