கோவில்களில் பெண்களை அர்ச்சகராக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூகநீதிக்கான அரசு, தந்தை பெரியார் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் பல்வேறு சமூகம் சார்ந்த முறையான பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது இந்திய சமூக வரலாற்றில் மாபெரும் சமூக புரட்சி, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் திமுக அரசு இந்த புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
இதனை விடுதலை சிறுத்தை கட்சி மனதார பாராட்டுகிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்றால் அது அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில் சிலர் இதை எதிர்த்து கூச்சலிடுகிறார்கள். இந்துக்கள் ஒற்றுமை பேசும் அவர்கள் சமத்துவத்தை ஏற்க மறுக்கிறார்கள். கோவிலில் அர்ச்சகராக இந்துக்கள் அல்லாதவர்கள் இங்கே நியமிக்கவில்லை, இதனை சிலர் ஏற்க மறுத்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். திமுக அரசை எச்சரிக்கிறார்கள், நீதிமன்றத்திற்கு செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள்.
ஆனால் தமிழக முதல்வர் இதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். சமூக நீதிக்கான இந்த முயற்சியில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தை கட்சி உற்றத் துணையாக இருக்கும்.
நேற்றைய தினம் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் இணைய வழி கூட்டம் நடைபெற்றது,
இதில் 21 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள் இடதுசாரிகள் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய இது அடித்தளமாக அமையும் என்று கருதுகிறேன்.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தாலும் தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பிரதானமானது.
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்பு கூட்டத்தை நடத்தி இருக்கின்றார், எம்பிக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்ற விரிவான குழுவை உருவாக்கி கூட்டம் நடத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
வன்கொடுமைகளை தடுக்க முதல்வர் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.
தமிழக அரசு பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர பிற்பட்டோர் சமூகத்தினர் மற்றும் பிற்பட்டோர் சமூகத்தினர் என 25 சமூகத்தினர் மத்திய அரசின் மேற்கண்ட பட்டியலில் இடம் பெறவில்லை, இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தனித்தனியாக பிரதமருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம். இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை தகர்க்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்,
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,
அப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலை சிறுத்தை கட்சி வெறுக்கக்கூடிய கட்சி இல்லை என்று கூறியிருக்கிறார் என கேட்டதற்கு அவர் நேரத்திற்கு ஒன்று பேசுவார் அவரே இந்தக் கருத்தில் உறுதியாக நிற்பார் என்று தெரியவில்லை ஆனாலும் காலம் காலம் தாழ்ந்தது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார், பாமக தலைமையில் ஆட்சி அமையும் என கூறி இருக்கிறாரே என கேட்டதற்கு இந்த அதீத கற்பனைக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை என்றார்.
திமுக கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது திமுக அனைவருக்குமான அரசு தற்போது அதிமுகவை கூட அரவணைக்கிறது, அதற்காக கூட்டணி அமைப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா என பதில் கேள்வி எழுப்பினார்.
தரமற்ற குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டிய காண்டிராக்டர்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானது என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என கேட்டதற்கு இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் அரசியலமைப்பு சட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பது பிரதானமாக இடம் பெற்று உள்ளது.
இதற்கு எல்லாம் அடங்கிவிடும் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் நிச்சயமாக இதில் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கொடநாடு வழக்கு விசாரணை குறித்து கேட்டபோது கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என்றால் அவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும் எத்தனை முறை புலனாய்வு நடத்தினாலும் எங்கள் மீது குற்றம் சுமத்த இயலாது என சொல்லிவிட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதேபோன்று சாதிக்பாட்சா வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பது நியாயமாக இருந்தால் அதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அரசு, பிரபாகரன், கனியமுதன், புல்லட் லாரன்ஸ், தமிழாதன்,தங்கதுரை,பரமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.