திருச்சி மாநகர புதிய போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா பேட்டிதிருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த காமினி சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார். இதையடுத்து
சிவில் சப்ளை சிஐடி ஐஜி ஆக பணிபுரிந்து வந்த ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று திருச்சி மாநகரத்தின் 34-வது காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்வர் விஜயின் உத்தரவின்படி மாநகரில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிரடி நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
மேலும்
மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இளைய தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா மற்றும் போதைப்
பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் பாயும்.
வளர்ந்து வரும் இணையவழி சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் ஏமாறுவதைத் தவிர்க்கவும் விழிப்புணர்வுடன் கூடிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடனும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று கூறினார்.
முன்னதாக, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்திற்கு வருகை தந்த புதிய கமிஷனர் ரூபேஷ் குமார் மீனாவை, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

