Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் பஞ்சப்பூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் முளைத்த சிறிய கடைகளை கண்டுகொள்ளாத தவெக அரசு . பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பல லட்சம் முதலீடு செய்த வியாபாரிகள் வேதனை .

0

'- Advertisement -

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் பஞ்சப்பூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் முளைத்த சிறிய கடைகளை கண்டுகொள்ளாத தவெக அரசு . பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பல லட்சம் முதலீடு செய்த வியாபாரிகள் வேதனை .

Ad banner

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.400 கோடிக்கு மேல் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தற்போது தனது பொலிவை இழந்து வருவதாகப் பயணிகளும், வணிகர்களும் குற்றம்சாட்டுகின்றனர். விமான நிலையத்திற்கு இணையான நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டதாகப் பாராட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் தற்போது அடிப்படை வசதிகள் முதல் கடைகளின் செயல்பாடுகள் வரை பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.

 

பேருந்து நிலையத்தின் உள்ளே ஏற்கெனவே முறையாகப் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வளாகத்திற்குள் கூடுதலாகச் சிறிய சிறிய கடைகள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஒப்பந்ததாரரின் இந்தத் தன்னிச்சையான செயலால், பல லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் முதலீடு செய்து கடைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 

பெரிய கடைகளுக்கு மாதம் சுமார் ரூ.5 லட்சமும், அதைவிடப் பெரிய கடைகளுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலும் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பேருந்து நிலையத்தின் வெளியிலேயே பயணிகள் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்வதால், உள்ளே உள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

மேலும், பேருந்து நிலையத்திற்குள் ஏகப்பட்ட விதிமீறல்களும் அரங்கேறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பஸ் நிலையத்திற்குள் குளிர்சாதனம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உள்ளே இருக்கும் கடைகளில் அடுப்பு எரிக்கக்கூடாது என்ற கடுமையான விதிகள் உள்ளபோதிலும், அங்கு விதிகளை மீறி அடுப்புகள் எரிக்கப்பட்டு பேருந்து நிலையம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகளும், வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி பேருந்து நிலையத்திற்குள் குளிர்சாதன வசதியும் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் வரும் பயணிகள் உள்ளே இருக்க முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர்.

பேருந்துகள் நிற்கும் பகுதிகளிலும், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளிலும் சிறிய கடைகள் ஆக்கிரமித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெளியூர்களிலிருந்து குழந்தைகளுடனும், அதிகமான உடைமைகளைச் சுமந்துகொண்டும் வரும் பயணிகள், நடைபாதைகளில் சிரமமின்றி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்திற்குள் குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் முறையான பராமரிப்பு ஆகியவற்றிலும் பெரும் குறைபாடுகள் இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. தகவல் திரைகள் பல இடங்களில் முறையாகச் செயல்படவில்லை என்றும் சில திரைகளில் தகவல்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் எந்தப் பேருந்து எங்கு நிற்கிறது, எந்த நடைமேடையில் ஏற வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில் பயணிகள் திணறி வருகின்றனர்.

பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம், தற்போது இத்தகைய புகார்களுக்கு உள்ளாகியிருப்பது ஏன் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், வளாகத்திற்குள் கூடுதலாகச் சிறிய கடைகளை அமைக்க அனுமதி வழங்கியது யார்? ஒப்பந்ததாரரின் இந்தத் தன்னிச்சை முடிவை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்? நடைபாதைகளில் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதும், விதிகளை மீறி அடுப்புகள் எரிக்கப்படுவதும் மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தெரியாதா? ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்தக் கடைகள் செயல்படுகின்றனவா? பயணிகளின் வசதிகள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனப் பல்வேறு கேள்விகளை வணிகர்களும் பொதுமக்களும் முன்வைக்கின்றனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து தமிழக முதலமைச்சரும், மாநகராட்சி ஆணையரும் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், விதிகளை மீறி அடுப்பு எரிப்பது குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தின் சுகாதாரம், குடிநீர் வசதி, தகவல் திரைகள் மற்றும் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

ஒருகாலத்தில் விமான நிலையத்திற்கு நிகரான நவீன பேருந்து நிலையம் எனப் பாராட்டப்பட்ட பஞ்சப்பூர், மீண்டும் அதே தரத்திற்குத் திரும்புமா? பயணிகளின் சிரமங்களும் வணிகர்களின் இழப்புகளும் முடிவுக்கு வருமா? தமிழக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதே தற்போது எழுந்துள்ளது முக்கியக் கேள்வி எழுந்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.