
திருச்சி ;பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மது பிரியர்கள், மது அருந்திவிட்டு சாலையில் மது பாட்டிலை போட்டு விட்டு செல்வதாகவும், பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அருகில் உள்ள விவசாய நிலங்களில் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு விட்டு செல்வதால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் இப்பகுதி பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூன்று மாதத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவாதம் அளித்தனர். ஆனால், தொடர்ந்து மூன்று மாதம் ஆன நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றாததால் ஆத்திரமடைந்த சேனப்பநல்லூர் பகுதி பொதுமக்கள் நேற்று(12-ந் தேதி, திங்கள் கிழமை) டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி டி.எஸ்.பி சச்சிதானந்தம், துறையூர் தாசில்தார் சித்ரா ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வரும் 10 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது ..

