சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் ..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23) பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள் இருந்துள்ளன. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அவரது மனநிலை பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி கனிஷ்கா யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார் என கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கடந்த 10 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

