திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்தில் அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் காரில் வந்திறங்கிய ‘டிப்டாப்’ ஆசாமிகள் இருவர் அவருடைய மையத்திற்கு வந்தனர். தங்களுக்கு அவசரமாக ரூ. 40,000 ரொக்கம் தேவைப்படுவதாக அவர்கள் பானுமதியிடம் கேட்டுள்ளனர். தாங்கள் அருகில் உள்ள பொன்மலை பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருவதாகவும், அங்கு தங்களுக்குச் சொந்தமான இரண்டு வணிக வளாகங்களை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், சேவைக்கட்டணத்துடன் சேர்த்து அந்தத் தொகையை ஆன்லைனில் அனுப்பிவிடுவதாக அவர்கள் கூறினர்.
அதற்கு பானுமதி சம்மதித்தவுடன், ஆன்லைனில் ரூ. 40,800 அனுப்பி விட்டதாக ஒரு போலிச் சான்றைத் (ஸ்க்ரீன் ஷாட் ) தங்களது செல்போனில் இருந்து அவரிடம் காண்பித்து உள்ளனர். அதை உண்மை என்று நம்பிய பானுமதி, கடை வாடகை மற்றும் தனது பிள்ளைகளின் கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக தான் வைத்திருந்த ரூ. 40,000 ரொக்கப் பணத்தைக் கொடுத்தார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த இரு நபர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.அதன் பிறகு அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்ணீர் மல்க பானுமதி தனது கணக்கில் பணம் ஏறவில்லை எனக் கூறி பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், “வங்கியில் சென்று கேளுங்கள். என் மேலாளர் வந்தவுடன் நானும் வங்கிக்கு அனுப்பிப் பார்க்கச் சொல்கிறேன்” எனக் கூறித் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பானுமதி, இது குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதையடுத்து போலீசார் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தர்மபுரியைச் சேர்ந்த பொறியாளர் சபரி மற்றும் சேலத்தைச் சேர்ந்த அவரது நண்பர் நெல்சன் என்பதும்,
மேலும், இவர்கள் தமிழகம் முழுவதும் இதே போன்ற பணப் பரிவர்த்தனை மோசடிகளில் ஈடுபட்டு வந்திருப்பதும் ,
தற்போது, இவர்கள் இருவரும், திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் ஆஜிதா என்பவரை ஏமாற்றிய வழக்கில், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

