பஞ்சபூருக்கு இடமாற்றம் செய்தால் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்படும்.முதல்வருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை
பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு காய்கறி மொத்த வியாபாரத்திற்கு பழைய பால் பண்ணையில் அரசு நிலத்தை ஒதுக்க தமிழக முதல்வருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நூறாண்டு பாரம்பரியம் கொண்ட காந்தி மார்க்கெட் 6.5 ஏக்கர் பரப்பளவில் நிலையான மற்றும் செட் அமைத்த தரைக்கடைகள் என 3000 கடைகள் உள்ளன. இதனை சுற்றி பழமண்டி, வெங்காய மண்டி, வாழைக் காய் மண்டி, மளிகை மண்டிகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சி காலத் தில் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் கள்ளிக்குடி பகுதியில் சுமார் ரூ.76 கோடி செலவில் உருவாக்கப்பட்ட வணிக வளாகம் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் நகருக்கு வெளியே 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்ததாலும் வணிக ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. 465 கடைகள் மட்டுமே உள்ள நிலையில் அது திறப்பு விழா நடத்தியும் இன்னமும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் அதே பகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரே 21 ஏக்கரில் ரூ. 256 கோடி செலவில் வியாபாரிகளிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் புதிய மார்க்கெட் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த திட்டத்திற்காக மூவாயிரம் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டு பின்னாளில் எங்களை இடமாற்றம் செய்யும் போது வழக்கு சம்பந்தமான சிக்கல் வந்தால் காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்படும்.
ஆகவே காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் மார்க்கெட் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, திருச்சி மாநகரின் மையப்பகுதிக்கு அருகில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருக்கும் பழைய பால் பண்ணை அரசு நிலத்தை காய்கறி மொத்த வியாபாரத்துக்கு ஒதுக்கி தர வேண்டும். பின்னர் பழைய பால்பண்ணை இடத்தினை வணிக வளாகமாக மாற்ற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

