5 நிமிடங்களில் சுவையான இளநீர் பாயாசம்… கேட்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதுல்ல!
இளநீர் பாயாசம் என்கிற பெயரைக் கேட்டாலே, உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊறியிருக்க வேண்டும். இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!
மிக எளிமையாக ஐந்தே நிமிடங்களில் இந்த இளநீர் பாயாசத்தை செய்துவிடலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் இதை விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். இனி செய்முறையைப் பார்ப்போம்.
கெட்டியான பால் – அரை லிட்டர், இளநீர் வழுக்கைத் துண்டுகள் – ஒரு கப், தேங்காய் பால் – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – 1 டீ ஸ்பூன், முந்திரி – 10,
நெய் – ஒரு டீ ஸ்பூன்.
இளநீர் பாயாசம் செய்முறை :
இளநீர் பாயாசம் தயார் செய்யும் முறை வருமாறு:
முதலில் சிறிது இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த் தூள் ஆகியன சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு தேங்காய் பால் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது இளநீர் பாயாசம் ரெடி.
இளநீர் பாயாசத்தின் மீது இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி ஆகியன சேர்த்து அலங்கரித்து பருகலாம். அது இன்னும் சுவையைக் கூட்டும். செய்து மகிழுங்கள் மக்களே!