Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகனை கழுத்தை அறுத்துக் கொன்று பிணத்துடன் படுத்து தூங்கிய தந்தை.

0

'- Advertisement -

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சூரிய பிரகாஷ் (வயது 24) போதைக்கு அடிமையான இவர், தாய்-தந்தை மற்றும் சகோதரியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்து வந்துள்ளார். மது அருந்த பணம் இல்லாததால் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அடங்காமல் ஊர் சுற்றி வந்தார். அதில் ஓமலூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

 

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஜாமினில் வெளியே வந்த சூரியபிரகாஷ், தன்னை ஏன் ஜாமினில் எடுக்கவில்லை? என கேட்டு தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்று இரவு வழக்கம்போல தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த சூரியபிரகாஷ், ஆயுதத்தைக் காட்டி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு உறங்க விடாமல் துன்புறுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த காமராஜ், மகன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை அறுத்து, துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். கண் எதிரே மகன் உயிரிழக்க, காமராஜ் எங்கும் தப்பி ஓடாமல் அன்றிரவு வீட்டிலேயே படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலை சூரியபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு, அவரது தாய் கத்தி கூச்சலிட உறவினர்கள் அங்கு கூடினர்.

இது குறித்து வீராணம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மகனை கொலை செய்த தந்தை காமராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்து, தொல்லை கொடுத்த மகனை, பெற்ற தந்தையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.