Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி.

0

'- Advertisement -

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி.

தென்கைலாயம்’ எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் என்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகா சிவராத்திரி காலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வரும் நிலையில், ஐந்தாவது மலையில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு மலையேறும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் இருந்து தனது நண்பர்களுடன் ஆன்மீகப் பயணமாக கோவை சென்ற தேசிங்கு ராஜன், நேற்று மாலை மலையேறத் தொடங்கி உள்ளார். சவால்கள் நிறைந்த செங்குத்தான பாதைகளைக் கடந்து ஐந்தாவது மலையான சந்தன மலையை அவர் எட்டிய போது, திடீரென அவருக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அங்கு உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

​மலைப் பாதையின் உயரமான பகுதியில் ஆக்சிஜன் அளவு குறைவு மற்றும் கடும் உடல் சோர்வு காரணமாக அவர் திடீரென மயங்கிச் சரிந்து விழுந்து உள்ளார். இதைக் கண்டு பதறிய சக பக்தர்கள் மற்றும் வனத்துறையினர் அவருக்கு முதலுதவி அளிக்க முயன்று உள்ளனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி தேசிங்கு ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த வனத்துறை மற்றும் போலீசார் மலைப் பாதையில் இருந்து அவரது உடலை மீட்டெடுத்து அடிவாரத்திற்குக் கொண்டு வரும் பணியினை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

வெள்ளியங்கிரி மலை ஏறுவது மிகவும் கடினமான ஒன்று என்பதால், போதிய உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் பயணத்தைத் தொடர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை கொடுத்து உள்ளது.

குறிப்பாக, இதயப் பாதிப்பு அல்லது சுவாசப் கோளாறு உள்ளவர்கள் 7 மலைகளைக் கடப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மலையேறும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.