திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (வயது 27) என்ற பெண் வி.ஏ.ஓ-வின் மரணம் தற்போது கொலை வழக்காகத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது

அருணா, பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் வி.ஏ.ஓ-வாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பாக்கம் கிராம வி.ஏ.ஓ-வான சிவபாரதி (வயது 30) என்பவருக்கும் இருவரும் கடந்த 2023ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அருணாவின் வீட்டில் இக்காதலுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அருணாவின் சகோதரர்கள் சிவபாரதிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 29ம் தேதி அருணா வீட்டில் மயங்கி விழுந்த நிலையில், அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாகக் கூறி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அருணாவின் காதலன் சிவபாரதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர், “அருணாவிடம் கடைசியாகப் பேசியபோது, அவரது குடும்பத்தினர் அவரைப் பலமாகத் தாக்கியதாகவும், கட்டாயப்படுத்தி வாயில் விஷத்தை ஊற்றியதாகவும் என்னிடம் கூறினார். சாதி மறுப்புக் காதலால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரே அருணாவைக் கொலை செய்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

சிவபாரதியின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, போலீசார் இந்த வழக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அருணாவின் செல்போன் உரையாடல்கள் மற்றும் அவர் மருத்துவமனையில் இருந்தபோது கொடுத்த மரண வாக்குமூலம் ஏதேனும் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

