திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே பள்ளம் தோண்டியபோது, 10 பழைமையான பஞ்சலோக சிலைகள் மற்றும் 22 சிலைகளின் உதிரிப் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
காட்டுப்புத்தூா் அருகே உள்ள நத்தமேடு பழைய அக்ரஹாரம் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சிவன், பாா்வதி, நடராஜா், பெருமாள், விஷ்ணு, ஆஞ்சநேயா், விநாயகா் உள்ளிட்ட 10 பஞ்சலோக சிலைகளும், 22 பஞ்சலோக சிலைகளின் உதிரிப் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் ஈடுபட்டோா், இந்தச் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட உடன் இது குறித்து தொட்டியம் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்குவந்த வட்டாட்சியா் செல்வி, காட்டுப்புத்தூா் வருவாய் ஆய்வாளா் ராம்குமாா், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் சிலைகளைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இந்தச் சிலைகள் சுமாா் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சலோக சிலைகளாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த சிலைகள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகின்றனர் .