அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ‘ப’செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக.
திருச்சியில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் அமைந்த பிறகு, திருச்சி மாநகருக்குள் நடைபெறும் எந்த ஒரு கட்சி சார்பு நிகழ்ச்சிக்கும் கொடிகளை நடுவதற்கோ, பேனர்களை வைப்பதற்கோ மாவட்ட நிர்வாகம் எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதித்ததாக தெரியவில்லை.
ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு, உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு, ஏன்? கழகப் பொதுச் செயலாளர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு கூட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கடுமையான முறைகளை பின்பற்றுகிறது.
முறையாக பதிவுத்தபாலில் அனுமதி கடிதம் அனுப்பினாலும், ஒவ்வொரு முறையும் எங்கள் கழக நிர்வாகிகளையும், கொடி மற்றும் பிளக்ஸ் அமைக்கும் தொழிலாளர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகவே உள்ளது.
இதே மாநகருக்குள், தங்கு தடையில்லாமல் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. போதை வஸ்துகள் மற்றும் அதன் தொடர்பான கைதுகள் நித்தம் நடைபெறுகிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், உறையூர் பகுதியில், தங்கு தடை இல்லாமல் கிடைக்கும் மதுபானங்களை எதிர்த்து எங்கள் கழகம் சார்பாக நடைபெற்ற போராட்டங்களுக்கு அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் விதித்ததால், நாங்கள் மதுரை உயர் நீதிமன்றத்தை நாடி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வாங்கினோம்.
கூர்ந்து கவனிக்கும் பொது மக்களுக்கு, மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவணைப்பில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
இதே திருச்சி மாநகருக்குள், எத்தனையோ மாதங்களாக, எத்தனையோ நாட்களாக ஒரே இடத்தில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் இருப்பதை நாம் கவனிக்கின்றோம். மாநகராட்சி சுவரொட்டி பதாகைகளில் கூட பல மாதங்களாக ஒரே பிளக்ஸ்கள், ஒரே கட்சி சார்பாக அலங்கரிப்பதை நாம் காண்கிறோம்.
இப்படி பொது ஜனங்களும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட தெரியும் இந்த அத்துமீறல்கள், மாவட்ட அரசு நிர்வாகங்களுக்கு தெரியவில்லை போலும்.
மக்களை சில காலம் ஏமாற்றலாம் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்று கருத்துக்கேற்ப, விரைவில் மக்கள் விரோத சக்திகளின் மறைமுக தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
அதுவரை எங்களின் போராட்டங்கள் தொடரும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் வந்த அஞ்சா நெஞ்சர் டிடிவி தினகரன் எண்ணத்திற்கேற்ப, மக்களின் துணையுடன் தகர்த்தெறிவோம் என செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்