ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் , எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் வேண்டுகோள் .
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கல்லறை திருநாள் (All Souls Day) என்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வரும் நாள் தான் கல்லறைத் திருநாளாகும்.
அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையினை சுத்தம் செய்து மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் வைத்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபிக்கும் நாளாகும்.
கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET Exam 2025 என்கின்ற ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் தாங்கள், கல்லறைத் திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தரவேண்டும் என்று தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவர்களின் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.
எங்களது கோரிக்கையை எப்பொழுதும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தி வரும் தாங்கள் TNTET Exam 2025 ஆசிரியர் தேர்வு தேதியினை வேறு ஒரு நாட்களில் மாற்றி செயல்படுத்தி தருவீர்கள் என்று நம்பிக்கையோடு வேண்டுகோள் வைக்கின்றேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .