Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆந்திராவில் இருந்து காரில் மதுபாட்டிகள் கடத்தி வந்த போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது.

0

சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அந்த காரில் 5 பேர் இருந்தனர். போலீசாரிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

அதில் ஒருவர், “நான் போலீஸ். எம்.கே.பி. நகர் சரக உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டரை எனக்கு தெரியும். என்னை விடுங்கள்” என்று பந்தாவாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரை சோதனை செய்தனர்.

அதில் காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் இருந்த காருடன், 5 பேரையும் கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அதில் காரில் வந்தது, கொடுங்கையூர் 5-வது பிளாக் 5-வது தெரு முத்தமிழ் நகரைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 48) என்பதும், இவர் புழல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவதும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.மேலும் அவருடன் காரில் வந்தது, திருவேற்காடு அல்லிகொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28), அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (39), கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4-வது பிளாக்கை சேர்ந்த வெங்கடேசன் (55), கொடுங்கையூர் 7-வது பிளாக்கை சேர்ந்த மோகன் (40) என்பதும் தெரியவந்தது.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபானம் கிடைக்காமல் மதுபிரியர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் இவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி காரில் சென்னைக்கு கடத்தி வந்து, கொடுங்கையூரில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து போலீஸ்காரர் பிரபாகரன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 250 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.