திருச்சி டாஸ்மாக்கில் நடைபெற்ற கொலை வழக்கில் தமமுக பகுதி செயலாளர் உள்பட 3 பேர் கைது. கொலையானவர் மீதும் வழக்குப்பதிவு
திருச்சி டாஸ்மாக்கில் நடந்த இருதரப்பு மோதலில்
இரும்பு வியாபாரி கொலையில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பழக்கடை வியாபாரி சரவணன் (வயது 44). இவர் நேற்று மாலை தேவதானம் பகுதியில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அவர் எதிரே, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மலைக்கோட்டை பகுதி செயலாளரும், என்எஸ்பி சாலையில் தள்ளுவண்டியில் பழச்சாறு கடை நடத்தி வரும் வியாபாரியான சுப்பிரமணியன் (வயது 44) மற்றும் அவரது நண்பர்களான பனையக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ்,, ராஜூ ஆகியோரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சரவணனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சரவணன் தனது உறவினரான தாராநல்லூர், கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் சஞ்ஜீவிநகர், பொன்மணி நகரைச் சேர்ந்த கருக்குவேல் ராஜ் (வயது 44) என்பவரை அழைத்துள்ளார்.
கருக்குவேல் ராஜ் அங்கு வந்து தட்டிக்கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. பார் ஊழியர்கள் இங்கு பிரச்சனை வேண்டாம் எனக் கூறி அவர்களை வெளியேற்றினர்.

வெளியே சென்ற பிறகும் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது சுப்பிரமணியன் பீர் பாட்டிலால் குத்தியதில் கருக்குவேல்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சரவணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் கருக்குவேல் ராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் சிபின், கோட்டை உதவி ஆணையர் ஆரோக்கியராஜ், ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதலுக்கு பின்னணியில் இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மோதலில் காயமடைந்த சரவணன், சுப்பிரமணியன், நாகராஜ் என்கிற கண்ணையா ராம் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக கோட்டை போலீசார்,கீழ தேவதாரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (வயது 42), கல்லணை ரோடு பனையக்குறிச்சி சர்க்கார் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 40 ),ராஜூ (வயது 44) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில்,ராஜு என்கிற கன்னையா ராம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சரவணனும், கற்குவேல் ராஜும் பீர் பாட்டிலால் இவரை தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் இறந்தவர் மற்றும் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.