Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் புறநகர் காவல் எல்லைக்குள் வருகிறது திருவெறும்பூர் காவல் நிலையம். இங்கே காவல் ஆய்வாளராக இருந்து வருபவர் கருணாகரன்.

 

இவர் பொறுப்பேற்றதிலிருந்து தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக அக்கறையுடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதோடு, திருவெறும்பூர் காவல் நிலையத்திலும் சரி, பொதுமக்கள் பாதுகாப்பிலும் சரி, புதிய அணுகுமுறைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

 

பொதுமக்களின் பாதுகாப்புக்காக திருவெறும்பூர் காவல் எல்லை தொடங்கும் திருச்சி தஞ்சை பிரதான சாலையில் ஆயில்மில் பகுதியில் இருந்து காட்டூர் கடைவீதி, எல்லக்குடி பிரிவு சாலை, கைலாஷ் நகர், அம்மன் நகர், பாலாஜி நகர், பிரகாஷ் நகர், மலைக்கோவில், டி.நகர், திருவெறும்பூர் கடைவீதி, பாரதிபுரம் வளைவு, கணேசா பகுதி வரை 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு, இப்பகுதி மக்கள் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கல்லணை பிரிவு ரோடு, அரசாயி அம்மன் கோவில் பிரிவு சாலை, வேங்கூர், பூசத்துறை பிரிவு பகுதி உள்ளிட்ட சுமார் கிராமப்புற பகுதிகளில் சுமார் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

அண்மையில் திருவெறும்பூர் காவல் எல்லைப் பகுதியில் பொது இடங்களில் மது அருந்தியவர்களை பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், அவர்கள் 10 திருக்குறள்களை ஒப்புவித்து செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். இது அப்பகுதியில் மதுப்பிரியர்களுக்கு நூதன தண்டனை வழங்குவதாகவும், அவர்கள் இதற்காக திருக்குறள்களை படிக்கும் ஒரு சூழலையும் ஏற்படுத்தியது. இது பொதுமக்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இதனால் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரனுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இது குறித்து காவல் ஆய்வாளர் கருணாகரன் தெரிவிக்கையில், “பொது வெளியில் ஒரு சம்பவம் நடந்து, அதன்பின் நாங்கள் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் செய்வதற்கு முன்பு அந்த குற்றம் நிகழாமல் தடுப்பதே எங்களது முதல் வேலை. அதற்காகத்தான் இவ்வளவு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது. எங்களுக்கு அதற்கான நல்ல ஆலோசனையை திருச்சி மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம், நல்ல வழிகாட்டுதலை திருவெறும்பூர் உட்கோட்ட ஏ.எஸ்.பி.பனாவத் அரவிந்த் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

 

தற்போது காவல் நிலைய வளாக உள்பகுதியில் 100 மரங்கள் விரைவில் நடப்பட உள்ளது, கார்டன் வசதியும் செய்யப்பட உள்ளது, அதேபோல் காவல் நிலைய வளாகத்தில் கால்நடைகள் உள்ளே வந்து இங்கு புகார் தர வந்து இருக்கும் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வரவே தற்பொழுது நுழைவு பகுதியில் கேட் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு புகார் கொடுக்க வரும் மனுதாரர்கள் கனிவுடன் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான வரவேற்கும், மரியாதையும் இங்கு உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டு வரும் அவர்கள் இங்கு கண்ணியமாக நடத்தப்படுவதுடன், அவர்களின் புகாரில் உண்மைத்தன்மை இருக்குமேயானால் உடனடி நடவடிக்கையும் தயவுதாட்சனையின்றி எடுக்கப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.