நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பைக்கில் சென்று வந்துள்ளார். அப்போது தா.பேட்டை துறையூர் மெயின் ரோட்டில் ஊரக்கரை செல்லாண்டியம்மன் கோவில் அருகே சத்யாவை ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார்.
அவ்வாறு பைக்கை தடுத்டு நிறுத்திய அந்த நபர் கத்தியை காட்டி தான் பெரிய ரவுடி என்றும், பையில் இருக்கும் பணத்தை கொடுத்து விடு என மிரட்டியுள்ளான். ஆனால் சத்யா பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பையில் இருந்த பணம் ரூ 5,200 யை வலுக்கட்டாயமாக பறித்து கொண்ட அந்த நபர் பைக்கில் ஏறி தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சத்யா தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்தது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தா.பேட்டை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் அவரின் செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போலீசார் தா.பேட்டை அருகே உள்ள மகாதேவி என்ற பகுதியில் மனோஜ்குமாரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது சத்யாவிடம் இருந்து வழிப்பறி செய்த ரொக்க பணம் மீட்கப்பட்டது. சத்யாவிடம் வழிப்பறி செய்தது மனோஜ்குமார் தான் என்பதும் உறுதியானது. இதையடுத்து போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் காமினி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கைகள் குறித்த தொடர் கண்காணிப்பில் தடை ஏற்படக் கூடாது என்று கூறியிருந்தார். அந்நிலையில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 33 வழக்குகளில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மனோஜ்குமார் மீது 27 வழிப்பறி வழக்குகளும், 6 திருட்டு வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மனோஜ் புலனாய்வு வார பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வருவதாக கூறி அரசு அதிகாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. பத்திரிகையாளர் எனக்கூறி அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபடுவதாகமாக இருந்த மனோஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.