திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த சில ஆண்டுகளில் பன்றிகள் தொல்லைகள் இல்லை என்ற அளவுக்கு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அது உண்மை என்றளவில்தான் இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாநகராட்சியில் எங்குமே பன்றிகளைக் காணமுடியாத நிலைதான் இருந்து வந்தது. ஆனால், பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை விட அவற்றைக் கட்டுப்படுத்திதான் வைத்துள்ளனா் என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவ்வப்போது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்காங்கே பன்றிகள் இறைச்சி விற்பனை செய்யப்படும். அங்கு கேட்டால் இவை வளா்ப்புப் பன்றி, இறைச்சிகளுக்காகவே பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வருகின்றன என்ற தகவல்தான் கிடைக்கும்.
நிலை இவ்வாறிருக்க கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகராட்சிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளில் கூட உள்ளது என்ற தகவல்கள் படம் மற்றும் காணொலிகளுடன் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து பன்றிகள் நடமாட்டம் குறித்து சமூக நல ஆா்வலா் அளித்த தகவலின்பேரில் திருச்சி விமான நிலையம் எதிா்ப்புறம் உள்ள பாரதிநகா், அம்பிகை நகா், லூா்து நகா், காந்திநகா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்த்தபோது அங்கு பன்றிகள் நடமாட்டம் இருந்தது உறுதியானது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, அருகாமையில் எங்கோ (இடம் தெரியவில்லை) சிலரால் வளா்க்கப்படும் பன்றிகள் அவை என்பதும், அண்மைக்காலமாகவே அவைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனா்.
இரு நாள்களுக்கு ஒருமுறையோ சில நேரங்களில் அடுத்தடுத்த நாள்களிலோ அப்பகுதிகளில் சுமாா் 7 முதல் 12-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக அண்மையில் கடந்த சிலநாள்களாக பெய்த தொடா் மழை காலங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் இது தொடா்பாக, பகுதி 61வது மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளனா். பின்னா் மாநகராட்சி அலுவலா்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இனிகோ இருதயராஜ் அலுவலகத்திலும் (அவரது உதவியாளரிடம்) புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் இதுவரையில் பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனா். இதுபோல மேலும் சில மண்டலப் பகுதிகளிலும் பன்றிகள் நடமாட்டம் சிறிதுசிறிதாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி 4-ஆவது மண்டல துணை ஆணையா் சண்முகம் கூறும்போது:- மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பன்றி வளா்ப்புக்கு முற்றிலுமாக அனுமதி கிடையாது.
எனவே பன்றிகள் நடமாட்டம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொன்மலை கோட்டப் பகுதிகளில் (மண்டலம் 4) பன்றிகள் நடமாட்டம் குறித்து தற்போதுதான் தகவல் வரப்பெற்றுள்ளது. எனவே உடனடியாக அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்