பேருந்து – டிப்பர் லாரி மோதல்
ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.
திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து – டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று பிற்பகலில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டூர் பகுதியில் வந்தபோது, முன்னால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் இடப்புறம் திருப்பியுள்ளார். அப்போது சாலையோரம் சுமை ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதி, கட்டுப்பாட்டையிழந்து சாலையாரமிருந்த பள்ளத்தில் இறங்கி, ஏறி ஒரு காலி இடத்தில் நுழைந்து நின்றது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடம் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.