Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி தினமும் வழிபடும் விவசாயி. காரணம் என்ன?

0

 

திருச்சியை அடுத்துள்ள ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.

மேலும், இந்த கோயிலுக்கு நாள் தவறாமல் அவர் தினமும் சிறப்பு வழிபாடும் செய்து வருகிறாராம். பிரதமர் மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதாகவும் இதன் காரணமாகவே கோயில் கட்டியதாகவும் அந்த விவசாயி தெரிவித்தார்.

மத்தியில் இப்போது பிரமதர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி நடந்து வருகிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இப்போது பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையே திருச்சி மாவட்டம் ஏற்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்காகக் கோயில் கட்டி உள்ளார். 50 வயதான விவசாயி பி.சங்கர், தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்குச் சொந்த செலவில் கோயில் கட்டியுள்ளார். மேலும், இந்த கோயிலில் தினசரி சிறப்புப் பூஜைகளையும் செய்து வருகிறார்.

இந்த கோயிலில் பிரதமர் மோடிக்குச் சிலையை இவர் வைத்துள்ளார். மோடிக்குச் சிலை மட்டுமின்றி பல்வேறு போட்டோகளும் உள்ளன. கடவுள்களின் படங்களும் அதற்கு மேல் வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படங்களும் இதில் உள்ளன.

மேலும், இதில் மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷாவின் படமும் இருக்கிறது.

பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே மோடிக்குக் கோயில் கட்ட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1.2 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோயிலில் 8 x 8 அடிக்கு ஓடுகள் வேயப்பட்ட கூரை இருக்கிறது. பிரதமர் மோடியின் மார்பு அளவு சிலை இருக்கும் நிலையில், தினசரி இந்தச் சிலைக்கு இரண்டு புறமும் விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்.

இந்த சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை துபாயில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய அவர் விவசாயத்தை ஆரம்பித்துள்ளார். அப்போது தான் பிரதமர் மோடியின் திட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தருவதை உணர்ந்ததாகக் கூறும் சங்கர், இதனால் தனது வருமானமும் அதிகரித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “விவசாயிகளுக்கான ரூ. 2,000 (பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி) திட்டம், உஜ்வாலா யோஜனா, வீட்டுக்கு ஒரு கழிப்பறை போன்ற திட்டங்களால் நான் பலன் அடைந்தேன்” என்றார். இதுபோல மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதாலேயே அவர் பிரதமருக்குக் கோயில் கட்ட முடிவு செய்துள்ளார்.

இந்த கோயிலை அவர் கடந்த 2019 இறுதியில் திறந்துள்ளார். அப்போது முதல் ஒரு நாள் கூட தவறாமல் இந்த கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.