பேனரை தான் கிழிக்க முடியும் எங்க அண்ணனை ஒன்றும் …. முடியாது. கே என் நேருக்கு எதிராக விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் .
திருச்சியில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவகாரமும் அதனைத் தொடர்ந்து அவை அகற்றப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அந்தப் போட்டியில் கலந்து கொண்ட விஜயபாஸ்கரின் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பெருவெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவினரை சீண்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் தற்போது திமுக அமைச்சரான கேஎன் நேருவுக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான சி விஜயபாஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் பேசுபொருளாக இருக்கிறது.
அமைச்சர் கேஎன் நேருவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருச்சியில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கருப்பையா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டைக்கு என தனி மக்களவைத் தொகுதி இல்லாத நிலையில் திருச்சியின் சில தொகுதிகள் புதுக்கோட்டையின் சில தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. திருச்சியில் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தேர்தல் முடிவில் திமுக வெற்றி பெற்றாலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக போஸ்டர்களை ஓட்டினர். இந்த நிலையில் தான் விளையாட்டு வினையாகி போன கதையாக பேனர் வைத்த விவகாரத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தூக்கி அடிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விளையாட்டு அணிகள் இதில் கலந்து கொண்டன. குறிப்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்களும் கலந்து கொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு விஜயபாஸ்கர் ஸ்பான்சர் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழியிலும் விஜயபாஸ்கரின் புகைப்படத்தோடு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
திருச்சியில் வேறு மாவட்ட முன்னாள் அமைச்சரின் அதுவும் அதிமுகவை சேர்ந்தவரின் பேனர்கள் வைக்கப்பட்டது அமைச்சர் கேஎன் நேருவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து. உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடியாக திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் பொறுப்பு அதிகாரியாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி கண்காணிப்பாளர் கண்ணன் நியமிக்கப்பட்டார். விஜயபாஸ்கர் பேனர் விவகாரம் தொடர்பாகவே வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட அதிகாரிகள் இடையே பேசப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாதனை புரிந்திருக்கிறது சி.விஜயபாஸ்கரின் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி.
இந்த போட்டியில் சென்னை திருச்சி கோவை மதுரை சேலம் நெல்லை கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 19 வயதுக்கு மேற்பட்ட 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டதில் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் விஜயபாஸ்கரின் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஆண்கள் பிரிவில் 90 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் 62 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.
இதையடுத்து வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விளையாட்டுப் போட்டிகளுக்கு வைத்த பேனரை தான் கிழிக்க முடியும் எங்க அண்ணனை ஒன்றும் செய்ய முடியாது என அவரது ஆதரவாளர்கள் கமெண்ட் செக்ஷனில் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.