சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) என்ற பெயரில்
திருச்சியில் செயல்பட்ட போலி நிறுவனம் கண்டுபிடிப்பு.
பாட்டில்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சஞ்சீவி நகர் குறிஞ்சி தெருவில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு உணவு பாதுகாப்பு துறையில் எந்தவித உரிமமும் பெறாமல் பழைய தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி அதில் பாதுகாப்பற்ற குடிநீரை நிரப்பி விற்பனைக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரம் பாட்டில்களையும், சீல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் பாட்டில் மூடிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து அந்த போலி நிறுவனத்தை நடத்தி வந்த அதன் உரிமையாளர் பால்ராஜ் (வயது48) என்பவர் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 56, 58 -ன் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட நியமன அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை வாங்கும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். விற்பனை செய்வோரும் இதனை பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பான புகார்களை 9944959595 மற்றும் 9585959595 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.