Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பெண்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட 500 புதிய வேகன்கள்.

0

திருச்சிராப்பள்ளி பொன்மலை மத்திய பணிமனை நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் கோவிட்-19 தொற்று நோய் அபாயம் சூழ்ந்திருந்த நிலையிலும் இப்பணிமனைப் பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500 புதிய வேகன்கள் கட்டுமானப் பணியை செய்து நிறைவேற்றியது.

அகில உலகப் பெண்கள் தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக மார்ச் 13-ஆம் தேதி அன்று BLCS வேகன்களின் முதல் தொகுப்பு நிறைவடைந்ததை நினைவு கூறும் வண்ணம் இப்பணிமனையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 10 பெண் அதிகாரிகள் பொறியாளர்கள் குமாஸ்தாக்கள் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்

உதவி நிதி ஆலோசகர் S.P. தேவி, உதவி தணிக்கை அதிகாரி V. ஐஸ்வர்யா, இப்பணிமனையின் முதல் பெண் ISO 9606 வெல்டராக தகுதிப் பெற்றரவரும் மற்றும் இரண்டு வெல்டிங் நுட்பங்களிலும் திறமை வாய்ந்தவருமான A.சுமதி, இந்த வேகன்களை வடிவமைத்துத் தயாரிக்கும் பணியிலுள்ள வேகன் பணிமனைப் பிரிவின் மூத்த பெண் ஃபிட்டர்கள் B.புவனேஸ்வரி மற்றும் K.ரெங்கமணி, திட்டப் பொறியாளர் S.E.ராதிகா, ஒப்பந்தங்களுக்கான பொறுப்பாளர் J.கௌதமி, மூலப்பொருட்கள் கொள்முதலில் முனைப்பாய் செயல்படும் S.வனஜா, மனித வள நிபுணர் M.S. ஷீலா மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை தலைமை மகளிர் காவலர் U.சுதா ஆகியோர் இந்த சிறப்பு விருந்தினர் பட்டியலில் அடங்குவர்

இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திருச்சிராப்பள்ளி இரயில்வே டிவிஷனைச் சேர்ந்த மகளிர் லோகோ ஓட்டுனர்கள் P.ஜான்சிராணி மற்றும் N.நந்தினி, மகளிர் லோகோ ஆய்வாளர் P.நாராயண வடிவு, பிரேக் (கார்ட்) வேனில் மகளிர் கார்டு A.நீலாதேவி இவர்கள் இந்தப் புதிய வேகன்களை இயக்கியது குழுமியிருந்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது

இந்திய கொள்கலன் கார்ப்பரேஷன் வழங்கிய புதிய 1035 வேகன் ஆர்டரின் ஒரு பகுதியாக இந்த முதல் வேகன்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இரண்டடுக்குகள் கொண்ட கொள்கலன் வகை வேகனின் (BLCS) முக்கிய அம்சங்களாவன:

இவை 25 டன் எடையைத் தாங்குமளவிற்கு அச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 100 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேகன்களின் கண்காணிப்புக்காக ரேடியோ அதிர்வெண் அடையாளவில்லை (RFID) பொருத்தப்பட்டுள்ளது இதன் வாயிலாக சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டில் பயனுள்ள மற்றும் வெளிப்படையான செயல்பாடு உறுதி செய்யப்படுகிறது.

தடையற்ற எஃகு குழாய்களுடன், இரட்டைகுழாய் ஏர் பிரேக் முறை செயல்படுவதன் மூலம், ரயில் வண்டி ஓட்டுநர்களுக்கு ரயில் இயக்கத்திற்குத் தேவையான வேகக் கட்டுப்பாட்டும் செயலாற்ற உதவுகிறது.

எளிதான இயக்கத்திற்காக CENTRE BUFFER COUPLER -ஆல் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அகில இந்திய அளவில் இப்பணிமனையானது ஜீலை 2020-ல் BLCS வேகன்களைத் தயாரித்த முதல் நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே இந்த மேம்பட்ட வேகன்களின் மூல முன் மாதிரியை வெற்றிகரமாக முடித்த நம் நாட்டின் ஒரே பணிமனை என்ற பெருமையையும் பொன்மலைப் பணிமனையைச் சேரும்.

இந்த விழாவில் முன்னதாக முதன்மைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் மற்றும் மூத்த அதிகாரிகள் இப்பணிமனையின் பெண் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண் ஊழியர்கள் சிறப்புப் பலகையில் கையெழுத்திட்டு தங்கள் உறுதியைக் காண்பித்தது முக்கியமான நிகழ்வாகும். இந்தக் கையொப்பமிட்ட சிறப்பு அட்டை பணிமனையில் நினைவுப் பொருளாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.