Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் ரூ.100 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல். தேர்தல் ஆணையம் தகவல்.

0

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.


தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்புக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது.

இதுதவிர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட தேர்தல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக 4,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழகம் வந்தனர்.

அவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பறக்கும் படையினர் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அக்கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளதாலும், வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருவதாலும் மாவட்டம் தோறும்
நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் வேட்பாளர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நடத்தப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி மற்றும் இதர உலோக பொருட்கள், சேலைகள், துணிமணிகள், மடிக்கணினி (லேப்-டாப்), குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் (12-ந் தேதி) வரை நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 99 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம்- வெள்ளி பொருட்கள் மற்றும் இதர உலோக பொருட்கள், சேலை, துணிமணிகள், மடிக்கணினி, குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

11-ந் தேதி வரை ரூ.51 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12-ந் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.48 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கம் அடங்கும்.

இதுதவிர ரூ.51 லட்சம் மதிப்பிலான 22 ஆயிரத்து 959 லிட்டர் மதுபானங்களும் இந்த சோதனையின் போது பிடிபட்டன.

வருமான வரித்துறையினரும் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையில் மட்டும் ரூ.13 கோடியே 55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.