விஜய் டிவி-யில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீயா நானா நிகழ்ச்சியை தனி ஒருவனாக நடத்தி வரும் கோபிநாத், தற்போது வேறு சேனலுக்கு சென்றிருக்கிறார்.
விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதேபோல் மாகாபா ஆனந்த், ரக்ஷன், ஆகியோரும் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவில் கலக்கி வருகின்றனர். இதுதவிர விஜய் டிவியில் பணியாற்றிய தொகுப்பாளினிகளுக்கும் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகின்றனர்.
டிடி சினிமா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பாவனா பாலகிருஷ்ணனும் தற்போது முழு நேர கிரிக்கெட் தொகுப்பாளராக மாறிவிட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சென்றுவிட்ட பாவனா, அங்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி சேனல்களிலும் செம்ம பிசியாக பணியாற்றி வருகின்றார்.
அந்த லிஸ்ட்டில் சீனியராக இருப்பவர் தான் கோபிநாத். இவர் விஜய் டிவியின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கி வருகிறார். எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் அதில் நடுநிலைத் தன்மை உடன் விவாதத்தை சுமூகமாக நடத்தி முடிப்பது தான் கோபிநாத்தின் ஸ்பெஷல். இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அதில் அவருக்கு பெரியளவில் விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டார்
விஜய் டிவியை தவிர யூடியூப்பில் முன்னணி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்த கோபிநாத், தற்போது விஜய் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு தாவி இருக்கிறார். அதன்படி வருகிற மார்ச் 22-ந் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் மூலம் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார் கோபிநாத். ஏற்கனவே தமிழில் ஆர்.ஜே. பாலாஜி, பத்ரிநாத், யோமகேஷ், சடகோபன் ரமேஷ் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடன் இந்த சீசனில் கோபிநாத்தும் இணைய உள்ளாராம்.
ஐபிஎல் வர்ணனையாளராக போவதால் இனி அவர் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் அளித்துள்ள கோபிநாத், தான் விஜய் டிவியை விட்டு விலகவில்லை என்றும் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவேன் எனவும் கூறி இருக்கிறார். கோபிநாத்தின் வரவால் இந்த வருட ஐபிஎல் களைகட்டப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.