தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இறுதிநாளான நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெறுவதற்காக கட்சியினர் அதிக ஆர்வம் காட்டினர். இறுதிநாளான நேற்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), கே.சி.கருப்பணன் (பவானி), நிலோபர் கபில் (வாணியம்பாடி), எம்.எல்.ஏ. கே.பழனி (ஸ்ரீபெரும்புதூர்), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.தனபால் (செய்யூர்), பாலகங்காதரன் (சிவகாசி, விருதுநகர்), சுப்புரத்தினம் (நிலக்கோட்டை), அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளரும், சினிமா இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார் (விருகம்பாக்கம், தியாகராயநகர்), மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுனில் (தியாகராயநகர்), முன்னாள் நகர்மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன் (விருதுநகர்) உள்பட நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் போட்டியிட கோரி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்தனர்.
இதுபோல காலை 9 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நேற்று (மாலை 5 மணி வரை) வரையிலான கடந்த 8 நாட்களில் 8 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விருப்ப மனு வினியோகத்தில் இறுதிநாளான நேற்று கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களின் ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்கவும், பட்டாசு வெடித்தும், ஆரவாரங்களுடன் பலர் விருப்ப மனு தாக்கல் செய்ய வந்தனர். விருப்ப மனு தாக்கல் செய்தபின்னர் கட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மலர்தூவியும், பால் அபிஷேகம் செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது.
காலை, மாலை என இரு பிரிவுகளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த நேர்காணலில் கட்சி பணி, தொகுதி கள நிலவரம், மக்கள் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.