திருச்சி கல்லக்குடி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 8 பேர் மீது வழக்கு பதிவு . காளை முட்டி டிரைவர் பலி.

திருச்சி கல்லக்குடி அருகே
மஞ்சுவிரட்டு நடத்தியதில் காளை முட்டி வாலிபர் பலி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தது. அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே கல்லகம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அங்குள்ள இளைஞர்கள் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தினர்.
இந்த மஞ்சுவிரட்டு போட்டியை பார்வையிட கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் திரண்டனர்.
இந்த நிலையில் போட்டி நடந்த போது கலகம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 39) என்பவரை ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியது இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி தனலட்சுமி கல்லக்குடி போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் அனுமதியின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜு, ராமலிங்கம், சிவக்குமார், பிச்சை மணி, செல்வக்குமார், பன்னீர்செல்வம்,செல்லத்துரை, முரசொலி மாறன் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சுவிரட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை முட்டி லாரி டிரைவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

