சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மசூத். இவருடைய மனைவி சவுமியா. இவர் இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த கடந்த 6 ஆம் தேதி சவுமியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் மனைவி சவுமியாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் மசூத் தவித்தார்.
இந்த நிலையில் சவுமியாவுக்கு பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது. இதையடுத்து தாயையும் சேயையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு மசூத் போன் செய்தும் எந்த பதிலும் வராததால் வேறு வழியின்றி சவுமியாவையும் பிறந்த குழந்தையையும் மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என தெரிவித்தனர். உடனடியாக புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து படகை வரவழைத்து தாய், சேய் இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து 5 நாட்களாகியும் குழந்தையின் உடலை கொடுக்காமல் மருத்துவமனையில் அலைக்கழித்ததாக மசூத் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க ரூ. 2500 லஞ்சம் கேட்டதாகவும் மசூத் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் புளியந்தோப்பு காவல் நிலைய காவலர்கள் மூலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல் தந்தை மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றிக் கொடுக்காமல் அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் பிணவறையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர் பன்னீர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், கேம்.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இறந்த சிசுவின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த கொடூரம்! போட்டோவை பார்த்தாலே பதைபதைகிறதே!
விதிகளுக்கு முரணாக
6.12 .2023 அன்று சோனியா வீட்டிலேயே இருந்த நிலையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அன்று மாலை உள்நோயாளியாக தாயும் சேயும் கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்கள். குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பெண் குழந்தையின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. பெண் குழந்தை என்பதால் காவல் துறை முழு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இயற்கை முறையில் குழந்தை இறந்து இருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை எதுவும் தேவையில்லை என்றும் நேற்று மதியம் அறிக்கை கொடுத்தனர். குழந்தையின் உடலை உரியவர்களிடம் ஒப்படைக்கும் போது பிணவறை உதவியாளர் விதிகளுக்கு முரணாக அட்டை பெட்டியில் வைத்து கொடுத்துள்ளார். இது தெரியவந்தவுடன் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.
தவறு நடந்து இருக்கிறது: விசாரணைக்குழு அமைத்துள்ளோம். விசாரணைக்குழு அறிக்கையின் படி தகுந்த விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் என்றால் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் துணிகளில் சுற்றி கொடுக்கப்படும். அவர்களிடம் எந்த துணியும் இல்லை என்றால் மருத்துவமனையில் போதுமான அளவு துணிகள் இருக்கிறது. அதை முன்னாடியே நாங்கள் வைத்து இருக்கிறோம்.
அதை வைத்து சுற்றி இறுதி மரியாதை கொடுக்க வேண்டிய இடம். அதன்படிதான் கொடுக்க வேண்டும். இங்கு தவறு நடந்து இருக்கிறது. தவறு நடந்துள்ளதால் அமைச்சர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மருத்துவ கல்வி இயக்குனரும் ஆய்வு செய்து தகுந்த அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இதுபோல சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அதற்குரிய வழிமுறைகளை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.