மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு அதிமுக தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே இந்த அமைப்புகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலையொட்டி இவர்களுக்கு பூத் கமிட்டிகளில் செயல்படுவது குறித்து பயிற்சி அளிப்பது மற்றும் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நவம்பர் 21-ம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது கிளை அமைப்புகளின் களப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது