.ய
வீட்டில் செலவுக்கு பணம் பத்தவில்லை என கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டி கொன்ற கணவனுக்கு
வாழ்நாள் சிறை தண்டனை விதித்து
திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சி அருகே, மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என திருச்சி மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் துலையாநத்தம் (ஜம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட) புதுக்காலனியைச்சேர்ந்தவர் ரா. ரமேஷ் (வயது 39). ஆழ்துளைக்கிணறு தோண்டும் இயந்திரத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரமேஷ் அவ்வப்போது பணி காரணமாக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பச் செலவுக்கு ரமேஷ் தரும் தொகை போதவில்லை என கோமதி கூறி வந்துள்ளார்.
இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு (2022) செப்டெம்பர் மாதம் 9 ஆம் தேதி பகலில் இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், கோமதியை அரிவாளால் வெட்டியுள்ளார். அவர் அலறியடித்து ஓடிய நிலையிலும் விடாத விரட்டிச்சென்று வீதியில் வைத்து தலை, கழுத்து, முதுகு, கைகள் என பல இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து அரிவாளுடன் சென்று, ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக, ஜம்புநாதபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, பின்னர் திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில, நேற்று திங்கள்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி ரமேஷ்க்கு, வாழ் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.2000 அபராதம் விதித்தும் நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக அருள்செல்வி ஆஜரானார். வழக்கு பதிவு செய்யப்பட்ட 136 நாள்களில் குற்றவாளிக்கு, தண்டனை பெற்றுத்தரும் வகையில் வழக்கு விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார் (துறையூர்), பொன்ராஜ் (தா.பேட்டை), காவலர் கலைவாணி உள்ளிட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பாராட்டியுள்ளார்.