திருச்சி வழியாக, இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கு திரவநிலை ஆக்சிஜனை ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ளது.
இந்த ஏவுதளத்தில், ராக்கெட்டிற்கு நிரப்பக்கூடிய திரவநிலை ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, புதுச்சேரியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று கிளம்பியது.
லாரியை, கடலூர் மாவட்டம் மேலப்பாக்கத்தை சேர்ந்த செல்வகணபதி (வயது 35) என்பவர் ஓட்டினார்.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் புறக்காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை லாரி வந்தபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இவ்விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் செல்வகணபதி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கவிழ்ந்த லாரியில் இருந்து, ஒரு திரவம் சாலையில் பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பஞ்சப்பூர் புறக்காவல் நிலைய போலீசார், திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், டேங்கர் லாரி தீப்பிடிக்காமல் தடுக்க, நுரை வடிவில் இருந்த ரசாயன கலவையை தெளித்துச் சென்றனர்.
அதன்பின்னர், மாற்று டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்த திரவநிலை ஆக்ஸிஜன் அதில் மாற்றப்பட்டு, மகேந்திரகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

