திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு .. திருச்சி மாநகரில் செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பாலின சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பு, சம உழைப்பிற்கு சம ஊதியம், மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை மதித்தல், குடும்ப வன்முறையைத் தவிர்த்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், சமத்துவம் என்பது சலுகை அல்ல, அது நமது உரிமை என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது.
இரவையும் நமதாக்குவோம் என்ற நோக்கில் நடைபெறும் இந்நடைபயணம், அன்றைய தினம் இரவு 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது. இதில் பறை ஆட்டம், சிலம்பாட்டம், நடனம், பேச்சு மற்றும் துள்ளல் இசை (DJ) நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
இப்பயணத்தை மாதர், வாலிபர், மாணவர், சி.ஐ.டி.யு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள், தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய 7 அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
இந்நடைபயணத்திற்காக தமுஎகச முன்னாள் மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் தலைவராகவும், ஜனநாய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி செயலாளராகவும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் அருண் விவேக் பொருளாளராகவும் கொண்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாலின சமத்துவ நடைபயணத்திற்கான இலச்சினை (Logo) வெளியீட்டு விழா, மேஜர் சரவணன் நினைவுத்தூண் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது ..இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா இலச்சினையை வெளியிட, அதனை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் மற்றும் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் …
நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், தமுஎகச மலைக்கோட்டை கிளை செயலாளர் பிரசன்ன செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாதர் சங்க பொருளாளர் மாலதி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக தமுஎகச பொருளாளர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

