பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்: அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து திருச்சியில் இன்று முக்கிய ஆலோசனை… தொடர் போராட்டம் நடத்த முடிவு ..
பயிர்க் கடன் தள்ளுபடியில் தமிழக முதல்வர் தொடர்ந்து ஏமாற்றம் தரக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவதால், அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து திருச்சியில் அனைத்து விவசாய சங்கங்கள் கூடி ஆலோசனை நடத்தின.தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் பிரசாரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளின் முழு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கும் மேல் உள்ள பெரு விவசாயிகளுக்கு கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தபின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக முதலாவது அறிவிப்பில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும் அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறிப்பிட்ட வரைமுறையில் தள்ளுபடி அறிவிப்பு செய்து விவசாயிகளின் எதிர்ப்புக்கு ஆளானார்.
மாநிலம் முழுவதும் அனைத்து விவசாய சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இரண்டவது முறையாக 75 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி எனவும் அறிவிப்பு செய்தார் . இதனை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வந்த நிலையில், பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால், 110 விதியின் கீழும் ஏமாற்றம் தரும் வகையில் ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். எனவே, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யாத பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரவி மினி ஹாலில் இந்த கூட்டம் நடைபெற்றது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார்.த.வெ.க அரசு விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருச்சியில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் கூறினார் ..இந்த நிகழ்வில் தென்னிந்திய விவசாயிகள் சங்க அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

