ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.
விராலிமலை டோல்கேட் அருகே இன்று ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65) வியாபாரி. இவர் வியாபார விஷயமாக சென்னை சென்றார். பின்னர் நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு தனியார் பஸ் மூலமாக புறப்பட்டுச் சென்றார். இந்த பஸ் இன்று புதன்கிழமை அதிகாலை 1:45 மணி அளவில் திருச்சி தாண்டி விராலிமலை டோல்கேட் முன்பாக டீ குடிப்பதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது. உடனே செல்வகுமார் பஸ்ஸிலிருந்து இறங்கி பாத்ரூம் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பஸ் புறப்பட்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பஸ்ஸில் தன்னுடைய பேக்கில் ரூ.3 லட்சம் வரை வியாபாரம் செய்த பணத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த முதியவர் மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி சையது முஸ்தபா அந்த பேக்கரிக்கு சென்று உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் குற்றாலம் செல்வதற்காக செல்லும் வழியில், டீ குடிப்பதற்காக அங்கு சென்றனர்.
பின்னர் சையது முஸ்தபா பதட்டத்துடன் அங்கு நின்று கொண்டிருந்த முதியவரிடம் பேச்சு கொடுத்த போது நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். மேலும் பெரியவர் பஸ்ஸில் தனது பேக்கில் பணம் அதிகம் உள்ளது என கூறி கண் கலங்கினார் .உடனே சையது முஸ்தபா அவசர எண் 100க்கு போன் செய்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் முதியவரின் கையில் இருந்த பஸ் டிக்கெட்டை வாங்கி பஸ் கம்பெனி பெயரை அறிந்து கூகுளில் போய் செர்ச் செய்து ஒரு வழியாக பஸ் டிரைவர் நம்பரை பெற்று அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பஸ் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் தாண்டி சென்று விட்டது. பின்னர் பஸ்சை அங்கு ஓரம் கட்டி நிறுத்த சொல்லிவிட்டு, அந்த முதியவரை தாங்கள் வந்த டூரிஸ்ட் வேனில் அழைத்துக் கொண்டு சென்றனர். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரை பயணிகள் கண்டித்த போது கவனக்குறைவாக நடந்து விட்டதாக கூறி மன்னிப்பு கோரி உள்ளனர். மேலும் பஸ்ஸில் ஏறி முதியவர் தான் வைத்திருந்த பையில் பணம் பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். சுற்றுலா சென்ற குடும்பத்தில் உதவிக்கு முதியவரும் சக பயணிகளும் நன்றி தெரிவித்து வருகின்றனர்

