
திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார்.இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்பொழுது சிலர் பட்டாசு வெடித்த போது பழனியாண்டியின் வீட்டின் கூரை மீது தீப்பொறி விழுந்து திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று பலமாக வீசியதால் தீ சிறிது நேரத்தில் மள மள என பற்றி எரிந்து குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதற்கிடையில் தகவல் அறிந்து துறையூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம், பணம்,நகை போன்றவை கருகியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து துறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

