பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று திருச்சி விராலிமலையில் மது மற்றும் …..வுடன் ஜாலியாக இருந்த அர்ச்சகர் கைது

பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று ஜாலியாக இருந்த சென்னை அர்ச்சகரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் சென்னை, பெங்களூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோடை காலத்தில் அன்னக்கூட பாவாடை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இங்கு வசித்த பிராமணர்கள் அனைவரும் வெளி நகரங்களுக்கு சென்றதால், கோயிலில் தினசரி பூஜை செய்ய சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரகுராம்(45) என்பவரை கோயில் தர்மகர்த்தாவாகவும் செய்யாறு சிப்காட் தாசில்தாராகவும் உள்ள சம்பத்குமார் கடந்த மாதம் நியமித்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் வேலை செய்த அர்ச்சகர் ரகுராம் கடந்த 2ம் தேதி ரூ.20 ஆயிரம் ஊதியத்தை கோயில் தர்மகத்தா சம்பத்குமாரிடம் பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக சென்றவர், மீண்டும் கோயிலுக்கு வரவில்லை.
பின்னர் மறுநாள் பூஜை செய்ய சென்ற போது அலமேலுமங்கை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி மற்றும் 3 செயின் உள்ளிட்ட 8 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத்குமார் தெள்ளார் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்து உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் டிஎஸ்பி சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், பாபு ஆகியோர் கொண்ட தனிபடையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அர்ச்சகர் ரகுராம் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் திருச்சி அடுத்த விராலிமலை பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கோயில் நகையை திருடி அதனை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றி விற்பனை செய்ததும், கடந்த இரு வாரங்களாக அந்த பணத்தில் பல இடங்களில் ஊர் சுற்றியதும், திருச்சி விராலிமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மது விருந்துடன் ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அர்ச்சகர் ரகுராமை கைது செய்து, நேற்று காலை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ச்சகர் யாரிடம் நகையை விற்றார்? இதற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.