திருச்சி குரு ஹோட்டலில் ஊழியரை அடித்து கொலை? உரிய நடவடிக்கை எடுக்க கோரி சகோதரி காவல் நிலையத்தில் புகார்
குரு ஹோட்டல் ஊழியர் மர்ம மரணம்: மேலாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் புகார் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் குரு ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் (வயது 43) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாகராஜின் சகோதரி காவல்துறையில் அளித்துள்ள புகாரின்படி, கடந்த ஜூன் 28-ஆம் தேதி சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவதாக நாகராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் இரவு அவரது செல்போனில் இருந்து ஹோட்டல் வாட்ச்மேன் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், நாகராஜ் ஹோட்டலின் பின்புறம் மயக்கநிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்கள் ஹோட்டலுக்குச் சென்று பார்த்தபோது, நாகராஜ் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன், ஹோட்டலின் பின்புற சாக்கடை ஓரத்தில் மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தங்கை மூலமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், நாகராஜுக்கும் ஹோட்டல் மேலாளருக்கும் நாகராஜுக்கு சம்பளம் மற்றும் பணித் தொடர்பான பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும், மேலாளர் மற்றும் சில ஊழியர்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனால் அவர்கள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குரு ஹோட்டல் மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

