Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அன்று தப்பித்த மாணவி இன்று கலெக்டர்

0

'- Advertisement -

கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Ad banner

இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜெனிபர், விபத்து நடந்த நேரத்தில் மேல் தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்ததால் தனது தம்பியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

எனினும், தனது கண் முன்னாலேயே சக குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் அவரது மனதில் ஆழமான வடுக்களையும் பெரும் வலியையும் ஏற்படுத்தியது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணிச்சலுடன் ஆறுதல் வழங்கிய மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு, சிறுமி ஜெனிபரின் மனதில் தாமும் ஒரு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற உயரிய லட்சிய விதையை விதைத்தது.

 

​கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்த ஜெனிபர், குடும்ப வறுமையின் காரணமாகத் தனியார்ப் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் தனது லட்சியத்தைக் கைவிடாமல், வீட்டிலிருந்தபடியே பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தும், தனது தாய் சுஜாதாவின் உறுதியான துணையோடும் சில ஆண்டுகாலம் மிகக் கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டார்.

 

இத்தகைய விடாமுயற்சியின் பயனாக, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ள ஜெனிபர், விரைவில் துணை ஆட்சியராகப் (டெபுடி கலெக்டர்) பதவியேற்கத் தயாராகியுள்ளார். கும்பகோணம் விபத்தின் சோக வடுக்களிலிருந்து எழுந்து வந்து சாதித்துள்ள இந்த பெண்ணின் சாதனை, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாராட்டுகளையும் பெற்று பயங்கரமாக வைரலாகி வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.