கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க அழைப்பு
கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை .

திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி’ (TASS) சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ‘இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு’ (YASSC – 2026) இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது.
விஞ்ஞானிகள் ஆதரவு
இளைஞர்களிடம் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு, இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் திருமதி நிகர் ஷாஜி, ராணுவ விஞ்ஞானி முனைவர் டில்லி பாபு உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகள் ஆலோசகர்களாக இருந்து ஆதரவளித்து வருகின்றனர்.
முன்னணி நிறுவனங்கள் கூட்டு
சென்னை கணித அறிவியல் நிறுவனம் (IMSc), பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST), அறிவியல் பலகை, எய்ட் இந்தியா மற்றும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (RRF) ஆகிய முன்னணி அறிவியல் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இம்மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் சிறப்பம்சங்கள்
“அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைத்தல்” (Bridging Science, Technology & Society) என்ற முதன்மைக் கருப்பொருளின் கீழ் இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விண்வெளி ஆய்வுகள், உயர் இயற்பியல், கோள்களுக்கு இடையேயான பயண தொழில்நுட்பங்கள், இந்தியாவில் வானியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம்.
மேலும், அறிவியல் கண்காட்சி, போஸ்டர் மற்றும் மாதிரி (Model) விளக்கங்கள், வானியல் புதிர்கள், அறிவியல் விளையாட்டுகள் மற்றும் முன்னணி விஞ்ஞானிகளுடனான நேரடி கலந்துரையாடல், அறிவியல் எழுத்துப் பயிற்சிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
யார் பங்கேற்கலாம்?
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் வானியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கலாம். மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகள் அல்லது புதிய அறிவியல் திட்ட யோசனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 10 மண்டல அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாநில அளவிலான மாநாட்டிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்வெளி அறிவியல் துறையில் எதிர்கால ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் https://tass.co.in/yassc-2026 என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் பொதுச்செயலாளர் ஜெ. மனோகர் தெரிவித்துள்ளார்.
பேட்டியின் போது திருச்சி அஸ்ட்ரோ கிளப். இணைச்செயலாளர் பி. மோசஸ் தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி செயலாளர் தி. சாந்தி, திருச்சி அஸ்ட்ரோ கிளப். தலைவர் சு. ஜெயபால், தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி இணையவழிப் பிரிவுமாநில ஒருங்கிணைப்பாளர் மு. ஆண்டிராஜ், திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணையவழி ஒருங்கிணைப்பாளர்மு. ரிஷிகேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

