சிங்கப்பூரிலிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன
.
திருச்சி விமான நிலையத்தில் குறுகிய ஓடுதளத்தின் காரணமாக மிகப்பெரிய விமானங்கள் தரையிரங்குவதில் சிக்கல்கள் உள்ளது. இருந்த போதிலும் அதிக பயணிகளின் எண்ணிக்கை காரணமாக தெற்கு ஆசியாவிலேயே 6-வது இடத்தை திருச்சி விமான நிலையம் பிடித்துள்ளது. இங்கு வரும் பயணிகளில் அதிகமானோர், தொழில்களுக்காகவும், வேலைகளுக்காகவும், டூரிசம், புலம் பெயர் தொழிலாளர்கள் என இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள 2800 ஆமை குஞ்சுகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், ஆமை குஞ்சுகளை கைப்பற்றி கொண்டு சென்றனர். தொடர்ந்து, ஆமை குஞ்சுகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணியிடம் அரிய வகை 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆமை குஞ்சுகள் இங்கு கடத்தி வரப்படுவதற்கு என்ன காரணம் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இந்த ஆமைகளை வளர்ப்பு அதிர்ஷ்டத்திற்காக பிராணியாக வளர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில் இவ்வகை ஆமைகள் வீட்டில் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் என நம்பி வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்திய வன உயிரியல் சட்டத்தின்படி, மற்ற நாடுகளின் உயிரினங்களை இந்தியா கொண்டு வருவது குற்றம். ஏனெனில், இந்திய சுற்றுச்சூழலுக்கு தொடர்பில்லாத உயிரினங்கள், இந்தியாவின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை. எனவே, அந்த ஆமைகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அரிய வகை ஆமைகள் ராசிக்காக மட்டுமில்லாமல் மருத்துவ பரிசோதனைக்காகவும், செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கும், இறைச்சிக்காகவும் கடத்தப்படுகின்றன என்றனர்.

