குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் நடந்தே பணிக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர்.
2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போன வழக்கில் 6 பேர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 2011ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தார்.
இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், சாட்சியாக ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும், தற்போது டிஎஸ்பியாகப் பணியாற்றும் சுந்தரேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்ப பெறப்பட்ட விவகாரத்தில் கவனம் ஈர்த்தவர். தனக்கு அளிக்கப்பட்டிருந்த அரசு வாகனம் திரும்ப பெறப்பட்டதால் நடந்தே காவல் நிலையத்துக்குச் பணிக்குச் சென்று பரபரப்பு ஏற்படுத்தியவர் டி.எஸ்.பி சுந்தரேசன்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து, தான் நேர்மையாக பணிபுரிவதால் என் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக அதிகமான வழக்குகள் பதிவு செய்துள்ளேன். இதில், சம்பந்தப்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளேன். நான் நேர்மையானவன். இந்த விவகாரத்தில் என்னை சஸ்பெண்ட் செய்தாலும் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட எஸ்.பி அழுத்தம் தருகிறார். அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவரது புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேரிடம் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

