சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள் எழுந்தருளியுள்ள இடங்கள்….இங்கு வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்.கஷ்டங்கள் விலகும்….
சமயபுரம் மாரியம்மனின் ஏழு சகோதரிகள் குறித்தும், அவர்கள் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் பற்றியும், அந்த திருத்தலங்களின் சிறப்புகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தனி சிறப்புடனும், தலைமைப் பண்புடனும் விளங்குகிறது.இந்த திருக்கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. இங்கு அருள் பாலிக்கும் சமயபுரம் மாரியம்மன் ஏழு சகோதரிகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அந்த ஏழு சகோதரிகள் குறித்தும், அவர்கள் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
1.சமயபுரம்
திருச்சி மாவட்டத்திலேயே சமயபுரம் அமைந்துள்ளது. இந்த இடம் சோழ மன்னன் ஒருவன் தன் தங்கைக்கு சீதனமாக உண்டாக்கி கொடுக்கப்பட்ட நகரம் என்றும், பாண்டிய மன்னர்கள் படையெடுப்பின் பொழுது அழிந்து வேம்பு காடாக மாறியதாகவும், பின்னர் இத்திருத்தலத்தில் மாரியம்மன் எழுந்தருளிய பின்னர் கோவிலாக எழுப்பப்பட்டது என்றும் தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தின் மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தை தலவிருட்சமாக கொண்ட சக்தியின் ஒரு நிலையாக போற்றப்படுகிறார்.
இங்கு இருக்கும் மூலவரின் விக்ரகம் மற்ற கோவில்களை போலன்றி மண் மற்றும் மூலிகைகளால் செய்யப்பட்ட தனித்துவமான வடிவம் கொண்டது. இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அமர்ந்த கோலத்தில் திருக்கரங்களில் சூலம், கத்தி, கேடயம், உடுக்கை ஆயுதங்களை தாங்கியவாறு மாதுளம் பூ நிறத்தில் உக்கிரத்துடனும், அதே சமயம் கருணையுடனும் காட்சியளிக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் வினை போக்கும் தாயாகவும் அம்மன் விளங்கி வருகிறார்.
2.அன்பில் முத்துமாரியம்மன்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். 700 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் திருவரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு உட்பட்ட உபகோயிலாகும். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அன்பில் கிராமத்து வேப்ப மரத்தடியில் அம்மன் தங்கியதாக கூறப்படுகிறது. அன்பில் முத்துமாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்கிற கருத்தும் உள்ளது. இந்த இந்த கோயிலில் அம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். இங்கு வழிபடுபவர்கள் கண் நோயிலிருந்து நிரந்தர குணமடைவதாக நம்பப்படுகிறது.
3.புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்
தஞ்சாவூருக்கு கிழக்கே அமைந்துள்ளது புன்னைநல்லூர் கிராமம். இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தைலக்காப்பு நடைபெறுகிறது. தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு வகை சக்திகளை காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமையப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழ சம்பு’ என்கிற நூல் குறிப்பிடுகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.
4. நார்த்தாமலை
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அருள்பாலிக்கும் முத்து மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனின் சகோதரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை உள்ளிட்ட ஒன்பது மலைகள் சூழ இந்த கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சன்னதியில் வடபுறத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் முருகன் யந்திரம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கையில் ராவணனுடன் யுத்தத்தின் பொழுது காயம் பட்ட வீரர்களை குணமாக்க சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் கொண்டு வந்த பொழுது அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் என்று கருதப்படுகிறது. இந்த கோயிலில் நீண்ட காலமாக உடல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காவடி எடுத்து வழிபட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலில் கரும்புத் தொட்டில் வைத்து வழிபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
5. தென்னலூர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள திருநல்லூர் என்று அழைக்கப்படும் தென்னலூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் சகோதரிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இந்த அம்மன் தானாக உதித்த சுயம்பு வடிவம் ஆவார். இவர் காவல் தெய்வமாக கிராமத்து மக்களால் வணங்கப்படுகிறார். மிக எளிமையாக கூரையிலேயே குடி கொண்டு பக்தர்கள் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தின் வரலாறு பெரும்பாலும் செவிவழி செய்திகளாகவே அறியப்படுகிறது. இந்தக் கோயில் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் என பிற தகவல்கள் எதுவும் இல்லை
6. கொன்னையூர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் அமைந்துள்ளது கொன்னையூர் கிராமம். இங்கு அமைந்துள்ள முத்து மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் சகோதரிகளில் ஒருவர் ஆவார். கிபி 1775 இல் செட்டிநாடு பிரமுகர்களுக்கும், உடையார் மன்னர்களுக்கும் போர் நடந்த போது வீரபத்திரன் என்பவர் வீர மரணம் அடைந்தார். அவருடைய மனைவியான கருப்பாயி உடன்கட்டை ஏறி கற்பரசியானாள். அவளது நினைவாக எழுப்பப்பட்ட கோயில் தான் இந்த கொன்னையூர் மாரியம்மன் கோவில் என்று செவி வழி செய்திகளும் உண்டு.
7. வீரசிங்கம்பேட்டை
திருவையாற்றுக்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம்தான் வீரசிங்கம்பேட்டை. இங்கு அமைந்துள்ள இள மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனின் கடைசி தங்கையாக என தல வரலாறு கூறுகிறது.
பெண் தெய்வங்களை வழிபடுவது என்பது தமிழர் மரபில் ஊறிய ஒன்றாகும். குறிப்பாக சக்தி வழிபாட்டின் மீது தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். மேற்கூறப்பட்ட திருக்கோயில்களின் திருவிழாக்களின் போதும், பூச்சொரிதல் போன்ற விழாக்களின் போதும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அக்னி சட்டிகள் ஏந்தியும், பால்குடங்கள் தூக்கியும், காவடி மற்றும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் சமயபுரத்தில் தேர்த் திருவிழாவிற்கு முன்னதாக அம்மன் 48 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். அப்போது அம்மனை குளிர் வைப்பதற்காக பூச்சொரிதல் நடைபெறும். அந்த காலகட்டத்தில் தன் சகோதரிகளின் திருக்கோயில்களில் இருந்து வரும் பூக்களையே சமயபுரம் மாரியம்மன் முதலில் ஏற்கிறார்.
இதன் மூலம் சமயபுரம் மாரியம்மன் தனது 7 சகோதரிகள் மீது கொண்டுள்ள பாசத்தை தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த 7 அம்மன் ஆலயங்களை ஒருமுறையாவது வழிபட்டு வாருங்கள்.

